பாம்புகளின் கூடாரமாக மாறிய கால்நடை மருத்துவமனை கட்டிடம்
தா.பழூரின் குடியிருப்பு பகுதியில் பாம்புகளின் கூடாரமாக மாறிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தால் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
கால்நடை மருத்துவமனை
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய 2 ஒன்றியங்கள் டெல்டா பகுதியாக உள்ளன. இங்கு முக்கிய சாகுபடி பயிர்களாக நெல், கரும்பு, கடலை உள்ளன. மானாவாரி பயிர்களாக முந்திரி, மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். இவர்களின் தேவைக்காக தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்கும் தா.பழூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது.
இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 45 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அந்த கட்டிடம் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தா.பழூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு அதில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழைய கட்டிடம் இடிக்கப்படாமல் தற்போது மரங்கள், செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்டிடம் முழுவதும் உள்ள புதர்களில் விஷ ஜந்துக்கள் வசித்து வருகின்றன. கால்நடை மருத்துவமனை வளாகத்திற்குள் கால்நடைகளை அருகில் உள்ள மரத்தடிகளில் கட்டுவதற்கு கூட இடமில்லாமல் வளாகம் முழுவதும் கட்டிடங்களால் நிரம்பி வழிகிறது.
கொட்டகை அமைத்து தர வேண்டும்
எனவே முற்றிலும் சேதமடைந்து பயன்பாட்டுக்கு தகுதி இல்லாமல் போன பழைய கட்டிடத்தை அகற்றி அந்த இடத்தில் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது அவற்றை கட்டி வைப்பதற்கு கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
சீனிவாசபுரத்தை சேர்ந்த விவசாயி ஜெயபால்:- கால்நடை மருத்துவமனை ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது. ஆனால் இப்போது கால்நடை மருத்துவமனை வளாகம் அருகில் உள்ள பகுதி அனைத்துமே குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது. எனவே இப்பகுதியில் இது போன்று இடியும் தருவாயில் ஒரு கட்டிடம் இருப்பது எல்லா நிலையிலும் ஆபத்தானது. எந்த அபாயமும் ஏற்படுவதற்கு முன்பாக அதனை இடித்து அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
அச்சுறுத்தலாக விளங்குகிறது
காரைக்குறிச்சியை சேர்ந்த செல்வமணி:- சுற்றுவட்டாரம் முழுவதும் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்ட நிலையில் இந்த கட்டிடத்தில் குடி புகுந்துள்ள விஷ பாம்புகள் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. கால்நடைகளையும் கால்நடை மருத்துவமனைக்கு தைரியமாக அழைத்துச் செல்ல முடிவதில்லை. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் இந்த பாம்புகள் புகுந்தால் உயிரிழப்பு உள்ளிட்ட விபரீதங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் வீட்டின் வெளியே விளையாடும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது.
எனவே அந்தக் கட்டிடத்தை அகற்றி அங்கே கால்நடைகளை கட்டுவதற்கு ஒரு கொட்டகை அமைத்து கொடுத்தால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
மழை பெய்யும்போது...
தா.பழூரை சேர்ந்த ராஜேந்திரன்:- கால்நடை மருத்துவமனை வளாகம் அருகில் எங்களது வீடு உள்ளது. அங்கிருக்கும் பழைய இடிந்த நிலையில் உள்ள கட்டிடத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. அருகில் வசிக்கும் நாங்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். அதனை இடித்து அகற்றி எப்போதும் மருத்துவமனை வளாகம் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நாங்கள் அச்சம் இல்லாமல் வாழ முடியும். சிதிலமடைந்து காணப்படும் இந்த கட்டிடத்தின் சுவற்றில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டிடம் சிதிலமடைந்து உள்ளதால் இந்த கட்டிடத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என எழுதப்பட்டு உள்ளது. இதனை படித்தவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அதன் அருகே செல்ல மாட்டார்கள், இதுவே படிக்காதவர்கள் திடீரென மழைபெய்யும்போது இந்த கட்டிடத்தில் ஒதுங்கினால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே இத்தகைய சூழ்நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றிவிட்டால் பயம் இன்றி இருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.