கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்


கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்
x

கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்

திருவாரூர்

வடபாதிமங்கலத்தில் கவனை அமைக்கப்பட்ட இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் புனவாசல், கிளியனூர், உச்சுவாடி, மாயனூர், சோலாட்சி, பூசங்குடி, மாதாகோவில் கோம்பூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள அவரவர் வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். வடபாதிமங்கலத்தில் காலம் காலமாக கால்நடைகள் அதிகளவில் இருந்த போதிலும் இதுவரை கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால், அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கால்நடை மருத்துவமனை அமைக்கப்படவில்லை.

கால்நடைமருத்துவமனை அமைக்க வேண்டும்

இதனால் கால்நடைகள் நோய் வாய்ப்பட்ட நேரங்களில் சற்று தூரத்தில் உள்ள சாத்தனூர், திட்டச்சேரி போன்ற ஊர்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது கொண்டு செல்லும் வழியிலேயே சில கால்நடைகள் இறந்து விட்டன. இதனால் வடபாதிமங்கலத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வடபாதிமங்கலத்தில் கால்நடைகளை நிறுத்தி சிகிச்சை அளிப்பதற்காக கவனை அமைக்கப்பட்டது. ஆனால், கவனை அமைக்கப்பட்ட இடத்தில் இதுவரை சிகிச்சை அளிக்கப்படவில்லை.

பயன்பாடற்ற நிலையில் கவனை

இதனால் கருவேல மரங்கள் சூழ்ந்து, கவனை காட்டுக்குள் மறைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் கால்நடைகள் டெட்டனஸ், அம்மை போன்ற கொடிய நோய்களாலும், விஷப்பூச்சிகள் கடித்தும், காயங்கள் ஏற்பட்டும் அடிக்கடி இறக்க நேரிடுகிறது. எனவே வடபாதிமங்கலத்தில் கவனை அமைக்கப்பட்ட இடத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story