கே.ஈச்சம்பாடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தல்


கே.ஈச்சம்பாடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தல்
x

கே.ஈச்சம்பாடி பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி

கால்நடை மருத்துவமனை

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மொத்தம் 311 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் கே.ஈச்சம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராம சுற்றுவட்டார பகுதியில் அக்ரகாரம் உள்பட 9 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆடு, மாடு, கோழி என 30 ஆயிரம் கால்நடைகள் இருக்கின்றன. இப்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கால்நடைகளை 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தனர்.

சாலை விரிவாக்க பணி

இதேபோல் மூக்கனூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த கோரிக்கை மனுவில், 'தர்மபுரி- அரூர் இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. மூக்கனூர் ஊராட்சி எல்லைக்குட்பட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை முறையாக அளவீடு செய்து தனியார் பயன்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்று கோரியிருந்தனர்.

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தி அவற்றை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தனிநபர் தொழில் முனைவோர் கடன் உதவி உள்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 31 பயனாளிக்கு ரூ.6 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹி முகம்மது நசீர் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story