தனிநபர் ஆக்கிரமிப்பால் மாட்டுத்தொழுவமாக மாறிய கிராம சேவை மையம்
தனிநபர் ஆக்கிரமிப்பால் மாட்டுத்தொழுவமாக கிராம சேவை மையம் மாறியுள்ளது.
கிராம ஊராட்சிகளில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பூட்டியே கிடக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணம் விரயமாகியுள்ளதுடன், இணையவழி தொடர்புகளுக்கு நகரங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு சான்றிதழ்கள் பெற அரசு அலுவலகங்களுக்கு அலையும் நிலையை மாற்ற கடந்த 2015-ம் ஆண்டில் மின்ஆளுமைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கிராம சேவை மையங்கள்
இதன்படி சான்றிதழ்களுக்கு மட்டுமல்லாது போட்டித்தேர்விற்கு விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பட்டா, சிட்டா உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. பொதுச்சேவை மையங்கள் கலெக்டர், தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களில் திறக்கப்பட்டன. தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஒன்றிய அலுவலகங்களிலும் விரிவுபடுத்தப்பட்டன.
இந்நிலையில் இத்திட்டங்களை கிராம அளவில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதன்படி கிராம சேவை மையங்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு மையங்கள் கட்டப்பட்டன. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துக்களிலும் சேவை மையங்கள் கட்டப்பட்டன.
வீணாகும் வரிப்பணம்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டது. இதில் பஞ்சாயத்திற்கு செலுத்த வேண்டிய பல்வேறு வரிகள் உள்ளிட்ட இணையவழி தொடர்பான அனைத்து பணிகளையும் கிராம மக்கள் இருக்கும் இடத்திலேயே செய்து கொள்ள உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இக்கட்டிடங்கள் பயன்பாட்டிற்கே வரவில்லை.
மகளிர் சுயஉதவிக்குழுவினர் அவ்வப்போது கூட்டம் நடத்தும் இடமாகவும், சில இடங்களில் தற்காலிக ஊராட்சி மன்ற அலுவலகங்களாகவும் உள்ளது. இதனால் பொதுமக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் விரயமாகிக் கொண்டிருக்கிறது.
மேலும் இணையவழி விண்ணப்பங்களுக்கு முன்பு போல வட்ட அளவிலான அலுவலகங்களுக்கு கிராமமக்கள் செல்ல வேண்டி உள்ளது.
மாட்டுத்தொழுவமாக மாறிய மையம்
அந்த வகையில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொரசப்பட்டில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மையம், தற்போது மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. இதனால் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துதல், அரசு ஆவணங்களுக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பலரும், அதிக கட்டணம் செலுத்தி தனியார் சேவை மையங்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த கட்டிடத்தை அப்பகுதியில் உள்ள தனிநபர் மாட்டுத்தொழுவமாக மாற்றி விட்டார். ஆம், கிராம சேவை மைய கட்டிடத்தின் முன் பகுதியில் மாடுகளை கட்டி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி மாடுகளுக்கு வழங்குவதற்காக வைக்கோலை வாங்கி, அங்குள்ள கழிவறையில் சேமித்து வைத்துள்ளார். ரு.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தற்போது தனிநபர் ஆக்கிரமித்து மாட்டுத்தொழுவமாக மாற்றி இருப்பதையும், இதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததாலும் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பயன்பாட்டிற்கு வருமா?
எனவே, கிராம சேவை மைய கட்டிடத்தை ஆக்கிரமித்து மாட்டுத்தொழுவமாக மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கட்டிடத்தை சீரமைத்து மீ்ண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பயன்பாடின்றி இருக்கும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பொதுமக்களின் அலைச்சலை குறைப்பதுடன், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணம் என்பதை உணர்ந்து இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.