பிரான்ஸ் நாட்டு பெண்ணை கரம்பிடித்த விழுப்புரம் வாலிபர்
பிரான்ஸ் நாட்டு பெண்ணை தமிழ் கலாசார முறைப்படி விழுப்புரம் வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.
விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த வேலுமணி- பரமேஸ்வரி தம்பதியினரின் மகன் விக்டர் என்கிற அஜித்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்படிப்புக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு படிப்பை முடித்த அவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அவருக்கும், அந்த நாட்டைச்சேர்ந்த கேன்சா என்ற இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்த அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதுபற்றி அவர்கள் இருவரும் தங்களது வீட்டில் பேசினர். அப்போது அவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் பச்சைக்கொடி காண்பித்தனர். தமிழ் கலாசாரத்தை பற்றி விக்டர் மூலம் கேன்சா அறிந்து இருந்ததால், அதன் மீது அவருக்கு அதிக மரியாதை ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தனது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடக்க வேண்டும் என விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
திருமணம்
அதன் பின்னர் விழுப்புரத்துக்கு தனது காதலி கேன்சா மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரை விக்டர் அழைத்து வந்தார். தொடர்ந்து, ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான நேற்று விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விக்டர், தனது காதலி கேன்சாவை கரம்பிடித்தார். இவர்களது திருமணம், தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வெளிநாட்டு பெண் தமிழக பெண் போல் சேலை அணிந்து, பூ, பொட்டு வைத்து தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்டதை பொதுமக்கள் வெகுவாக பார்த்து ரசித்தனர்.