அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்


அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேசிங்கன் ஊராட்சி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

கேசிங்கன் ஊராட்சி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அருண் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய விவரம் வருமாறு:-

வடவீரபாண்டியன்(காங்.):- பட்டவர்த்தி ஆதிதிராவிடர் தெருவில் பழுதடைந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதன் அருகில் குழந்தைகள் பால்வாடி உள்ளது. கடக்கம் பெரியதெருவில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியம் மூலம் அனுப்பப்படும் பணிகளுக்கான மதிப்பீட்டை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால் வளர்ச்சிபணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை

முருகமணி(தி.மு.க.):- கடந்த கூட்டத்தில் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஏன் கொண்டு வந்தீர்கள். கூட்ட தீர்மானங்களை முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். காந்தி(தி.மு.க.):- ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை, மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டு வராமலேயே டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கின்றன.

தலைவர்:- மாவட்டத்தில் உள்ள மற்ற ஒன்றியக்குழு தலைவர்களுக்கு வழங்கக்கூடிய அங்கீகாரம்கூட எனக்கு வழங்கப்படுவதில்லை. பணிகளின் விவரம், ஒப்பந்ததாரர் குறித்த தகவல்கள்கூட என்னிடம் தெரிவிப்பதில்லை.

சாலையை அகற்றாமல்...

பாக்யலெட்சுமி(தி.மு.க.):- எனது ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து எந்த தகவலும் எனக்கு தெரிவிப்பதில்லை. ராஜேஸ்வரி (அ.தி.மு.க.):- கேசிங்கன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். ராஜேந்திரன் (தி.மு.க.):- மன்னம்பந்தல் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை அகற்றாமல் அதன்மீதே மீண்டும் பாரத பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்படுகிறது. பல பழுதடைந்த சாலைகள் இருக்கும்போது புதிய சாலையின் மேலேயே மீண்டும் சாலை போட வேண்டிய அவசியம் என்ன?

சிவக்குமார் (தி.மு.க.):- மாப்படுகை ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும், பகுதி நேர அங்காடி கட்டிடத்தையும் அப்புறப்படுத்தி புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா நன்றி கூறினார்.


Next Story