பராமரிப்பு இன்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்


பராமரிப்பு இன்றி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:45 AM IST (Updated: 24 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சுத்திகரிப்பு எந்திரம்

கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளது. கூடலூர் நகரில் தினமும் ஏராளமான வெளிமாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இதுதவிர வெளி மாநில பஸ்களும் இயக்கப்படுவதால், கூடலூர் பஸ் நிலையத்திற்கு அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முக்கிய இடங்களில் தானியங்கி குடிநீர் எந்திரங்களும் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால், போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் பெரும்பாலான எந்திரங்கள் பழுதடைந்து பயனற்ற நிலையில் காணப்படுகிறது. முன்னதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் பஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தப்பட்டது.

பராமரிக்க கோரிக்கை

இப்பகுதியில் பல மாதங்கள் தொடர்ந்து மழை பெய்வதால் சூடான குடிநீர் வரும் வகையில் செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள், பயணிகள் பயனடைந்து வந்தனர். நாளடைவில் சுத்திகரிப்பு எந்திரம் போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்தது. ஆனால், பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாடு இன்றி காணப்படுகிறது.

மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாகத்தை தணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பராமரிப்பதுடன், பழுது பார்த்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story