2 குழந்தைகளுடன் விதவை கண்ணீர் மல்க மனு


2 குழந்தைகளுடன் விதவை கண்ணீர் மல்க மனு
x

வேலை கிடைக்கவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று 2 குழந்தைகளுடன் விதவை ஒருவர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கண்ணீர் மல்க மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பூவராகவன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கற்பகம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விற்பனையாளர் வேலை

முன்னதாக கடலூர் பூண்டியாங்குப்பம் முருகன்கோவில் தெருவை சேர்ந்த கதிர்காமன் மனைவி ரேவதி என்பவர், தனது 2 குழந்தைகளுடன் வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். அந்த மனுவில், எனது கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இதனால் எனது 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன். எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் வேலை கேட்டு பல முறை மனு அளித்து விட்டேன். ஆனால் எந்த பதிலும் இல்லை.

ஆகவே எனக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் விஷம் வாங்கி வைத்திருக்கிறேன். அதை குடித்து விட்டு சாவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி, அதை கூட்டுறவு துறை அதிகாரிக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இருப்பினும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story