ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்


ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

வால்பாறை வனப்பகுதிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருவதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுத்தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதுதவிர வால்பாறைக்கு இடம்பெயர்ந்து வந்த காட்டு யானைகள் தற்போது, கேரள வனப்பகுதிக்கு செல்கின்றன. இந்த யானைகளும் அவ்வபோது, வழித்தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

ரேஷன் கடை சேதம்

இந்த நிலையில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வந்த காட்டு யானை நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தாய்முடி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்தது. தொடர்ந்து சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானை அங்கிருந்து செல்லாமல் போக்கு காட்டியது. பின்னர் அந்த காட்டு யானை ரேஷன் கடையை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை எடுக்க முயற்சித்தது. அப்போது திடீரென ரேஷன் கடையின் மேற்கூரை சரிந்து யானையின் மீது விழுந்தது. இதையடுத்து யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

பொதுமக்கள் பீதி

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது, அந்த யானை தாய்முடி எஸ்டேட் பகுதி வழியாக நடந்து வந்து வால்பாறை முடிஸ் சாலையை கடக்க முயன்றது. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் சோலையாறு எஸ்டேட் சிலுவை மேடு வனப்பகுதிக்குள் துரத்தி விட்டனர். காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதேபோல் வரட்டுப்பாறை எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தன. இந்த யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். சிறிது நேரத்தில் காட்டு யானைகள் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டன. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story