வால்பாறை அருகேவீட்டின் மேற்கூரையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்-ஓடு விழுந்து சிறுவன் படுகாயம்
வால்பாறை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் ஓடு விழுந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.
வால்பாறை
வால்பாறை அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. இதில் ஓடு விழுந்து சிறுவன் படுகாயம் அடைந்தான்.
காட்டு யானை அட்டகாசம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை அடிக்கடி புகுந்து ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தி வருவதோடு ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள வனப் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டேன்மோர் எஸ்டேட் ஆத்துமட்டம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை மெலின் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்ததில் ஓடு உடைந்து வீட்டுக்குள் விழுந்துள்ளது.
ஓடு விழுந்தது
அப்போது வீட்டு படுக்கை அறையில் படுத்திருந்த மெலினின் மகன் மெல்வின் (வயது12) மீது ஓடு விழுந்தது. இதில் சிறுவன் மெல்வினுக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று, தீப்பந்தங்கள் காட்டி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதையடுத்து சிறுவன் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
காட்டு யானை ஊருக்குள் புகுந்து வீட்டு மேற்கூரையை சேதப்படுத்திய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.