ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்; மளிகை கடையில் இருந்த பொருட்களை நாசப்படுத்தியது


ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்; மளிகை கடையில் இருந்த பொருட்களை நாசப்படுத்தியது
x

ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. மேலும் மளிகை கடையில் இருந்த பொருட்களை நாசப்படுத்தியது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. மேலும் மளிகை கடையில் இருந்த பொருட்களை நாசப்படுத்தியது.

காட்டு யானை அட்டகாசம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

ஆசனூர் வனச்சரகத்தில் இருந்து வெளியேறும் யானைகள் ஓங்கல்வாடி, அரேபாளையம் கிராமத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அப்போது மனிதர்களையும் சில நேரம் தாக்குகின்றன. கடந்த மாதம் யானை தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மளிகை பொருட்கள் சேதம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர் அருகே உள்ள பங்களாதொட்டி கிராமத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் அங்கிருந்த வெங்கடேஷ் என்பவரின் மளிகை கடையின் ஷட்டர் கதவை துதிக்கையால் அடித்து உடைத்து திறந்தது. அதைத்தொடர்ந்து காட்டு யானை அங்கு 2 குலைகளில் தொங்க விடப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி, அரிசி, காய்கறி உள்பட மளிகை பொருட்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்து பார்த்த போது, மளிகை கடைக்குள் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விரட்டினர்

இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றது.

அதேபோல் ஓங்கல்வாடி கிராமத்தில் ராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்துக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பை தின்று சேதம் செய்துவிட்டு சென்றது. இதில் ½ ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சேதம் அடைந்தது. தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story