வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை
வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வால்பாறை
வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டு யானை சாவு
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது வால்பாறை வனச்சரகம். இந்த வனச்சரகத்தில் அய்யர்பாடி சுற்றுகவர்க்கல் எஸ்டேட் வனப்பகுதியில் வனவர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று, அழுகிய நிலையில் இறந்தது கிடந்தது.
இதுகுறித்து உடனடியாக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மற்றும் துணை கள இயக்குனருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களின் உத்தரவின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில், வனச்சரகர் மணிகண்டன் முன்னிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறையின் கால்நடை டாக்டர் விஜயராகவன் இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.
உடல்நிலை பாதிப்பு
தொடர்ந்து யானை இறந்தது குறித்து வனத்துறையினர் கூறுகையில், இறந்து கிடந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஆகும். வயிற்றில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக இறந்திருக்கலாம். உடல் உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளது.
ஆய்வக பரிசோதனைக்கு பிறகு தான் யானை இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும். மேலும் யானை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.