சரக்கு வாகனத்தை வழிமறித்து உணவு தேடிய காட்டு யானை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சரக்கு வாகனத்தை வழிமறித்து காட்டு யானை உணவு தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சரக்கு வாகனத்தை வழிமறித்து காட்டு யானை உணவு தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காட்டு யானை
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. பலாப்பழ சீசன் காரணமாக பலாப்பழங்கள் காய்க்க தொடங்கி உள்ளன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த காட்டு யானைகள் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. பலா மரங்களில் உள்ள பலாப்பிஞ்சுகளை உண்பதற்காக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.
இதனால் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக உலா வரும் ஒற்றை காட்டு யானை சாலையோர கடைகளை முற்றுகையிடுவதும், வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை காட்டு யானை திடீரென வழிமறித்தது.
போக்குவரத்து பாதிப்பு
பின்னர் யானை வாகனத்தை நோக்கி வந்தது. இதை பார்த்த டிரைவர் அச்சமடைந்து வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தார். இதைத்தொடர்ந்து காட்டு யானை சரக்கு வாகனத்தில் நீண்ட நேரம் உணவை தேடியது. அதில் இருந்த பொருட்களை தும்பிக்கையால் இழுத்து வெளியே போட்டது. நீண்ட நேரம் யானை சாலையின் நடுவே நின்றதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் யானை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்து வாகனங்களை வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.