குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானை
வால்பாறை குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு காட்டுயானை சுற்றி வருகிறது.
வால்பாறை
வால்பாறை குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு காட்டுயானை சுற்றி வருகிறது.
வால்பாறை வனப்பகுதி
காட்டு யானைகள் வலசை போகும் காலத்தில் கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்்து கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சில காட்டுயானைகள் சாலையிலும், ஊருக்குள்ளும் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் காலம் தொடங்கி விட்டதால் கேரள வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வலசையாக வந்த காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் கேரள வனப்பகுதிகளுக்கு பல்வேறு வழிகளில் செல்ல தொடங்கி வருகிறது. அதாவது வால்பாறை பகுதியில் கேரள வனப்பகுதியை ஒட்டிய எஸ்டேட் பகுதிகளான பன்னிமேடு, சேக்கல்முடி, ஹைபாரஸ்ட், நல்லமுடி, அக்காமலை புல்மேடு மற்றும் குரங்குமுடி எஸ்டேட் பகுதிகள் வழியாக தற்போது காட்டு யானைகளை செல்ல தொடங்கி விட்டது.
இதனால் வால்பாறை பகுதியில் தற்போது காட்டு யானைகளை பார்ப்பது அரிதாகி விட்டது. ஆனாலும் ஒரு சில எஸ்டேட் பகுதியில் ஒற்றை யானைகள் மட்டும் ஆங்காங்கே சுற்றித்திரிந்து வருகிறது.
ஒற்றை காட்டுயானை
இந்த நிலையில் வால்பாறை அருகில் உள்ள குரங்குமுடி எஸ்டேட், முருகன் எஸ்டேட் பகுதிகளில் மாதக்கணக்கில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு சுற்றித்திரிகிறது. இதனால் குரங்குமுடி, முருகன் எஸ்டேட் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறை எச்சரிக்கை
இதற்கிடையே வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் டார்ச் லைட்டுடன் தங்களது சொந்த வாகனங்களில் விலங்குகளை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களுக்கு வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.