தேயிலை தோட்டங்களில் தஞ்சம் அடைந்த காட்டுயானை
சின்னமனூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதி தேயிலை தோட்டங்களில் காட்டுயானை உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராசாமெட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் பச்சைபசேலென காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
மேகமலை வனப்பகுதி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் தினமும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேல்மணலாறு அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று தஞ்சம் அடைந்துள்ளது. அவை அங்கேேய உலா வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும்போது வழிமறித்து தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் குடியிருப்பு மற்றும் கடை பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவிடும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் செய்யாமல் பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களில் யானை உலா வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். எனவே ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.