கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில்சாலையின் குறுக்கே நின்ற காட்டு யானையால் பரபரப்பு
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையின் குறுக்கே நின்று சுற்றிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையின் குறுக்கே நின்று சுற்றிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் காட்டுயானை
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்த பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. சீசன் சமயத்தில் காய்த்து குலுங்கும் பழங்களை உண்பதற்காக சமவெளிப்பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு சீசன் முடிந்தவுடன் திரும்பிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து வந்துள்ள யானைகள் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளதுடன், சாலையோரங்களில் உள்ள பலா மரங்களில் உள்ள பலா பிஞ்சுகளை உண்பதற்காக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை சாலை குஞ்சப்பனை அருகே காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்று கொண்டிருந்தது.
வாகன ஓட்டிகள் அச்சம்
காட்டுயானையை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். இதன் காரணமாக சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்ற காட்டு யானை சாலையோரம் இருந்த செடி-கொடிகளை தின்றது.
பின்னர் அந்த யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து நிம்மதி பெருமூச்சுவிட்ட வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள், காட்டுயானைகள் சாலைக்கு வராமல் தடுக்கும் வகையில் அகழி அமைக்கவோ அல்லது இரும்பாலான தடுப்புகள் அமைக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.