டேன்டீ தோட்டத்தில் காட்டு யானை உலா
கொளப்பள்ளி அருகே டேன்டீ தோட்டத்தில் காட்டு யானை உலா வந்தது.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகர், பேக்டரி மட்டம், படச்சேரி, மழவன் சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை புகுந்து வீடுகள், ரேஷன் கடைகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. கொளப்பள்ளியில் இருந்து அய்யன்கொல்லி, பந்தலூர், கூடலூர் செல்லும் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்து வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை துரத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கொளப்பள்ளி அருகே குறிஞ்சி நகருக்குள் காட்டு யானை புகுந்தது. அங்கு தமிழ்செல்வன் என்பவரது வீட்டின் சமையலறை மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின் படி, வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டினர். இந்தநிலையில் நேற்று சேரங்கோடு டேன்டீ ரேஞ்ச் எண்.2-ல் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் காட்டு யானை புகுந்தது. இதனால் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். எனவே, காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.