காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
காட்டு யானை
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது வறட்சியான காலநிலை காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சாலையோரம் அதிகமாக நடமாடி வருகின்றன. அவை உணவு, தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன. இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்த வண்ணம் உள்ளது.
தற்போது காலை, மாலை நேரங்களில் பொள்ளாச்சி-வால்பாறை ரோடு, கவியருவி, சமமட்ட கால்வாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் காட்டு யானை, ஆழியாறு அணையில் தண்ணீர் குடித்து விட்டு செல்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் சமமட்ட கால்வாய் அருகே பாலம் பகுதியில் காட்டு யானை முகாமிட்டது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது யானை சாலையில் நின்றதால், அந்த வழியாக வாகனங்களை மெதுவாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
பயணிகள் அதிர்ச்சி
இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த பஸ்சை கண்டதும், காட்டு யானை துதிக்கையை தூக்கியது. இதனை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் சத்தம் போட்டனர். பின்னர் காட்டு யானை வனப்பகுதியிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி கூறியதாவது:-
வனப்பகுதியில் வறட்சிஏற்பட்டு வருவதால் ஆழியாறு அணைக்கு தண்ணீர் குடிக்க காலை, மாலை நேரங்களில் காட்டு யானை, வரையாடு, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் சாலை கடந்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. இதனால் பொள்ளாச்சி, கோவை செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும். வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். வனவிலங்குகளை புகைப்படம், செல்பி எடுக்கக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆழியாறு வனத்துறை சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.