காரை சேதப்படுத்திய காட்டு யானையால் பரபரப்பு
கூடலூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் சேதம்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட சுற்று வட்டார விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு குனில் வயல் பகுதியில் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளை மிதித்து நாசம் செய்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த அப்துல் முத்தலிப் என்பவரது கார் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்தது. இதை அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
கேரட்டுகளை தின்றது
இதனால் அங்கிருந்து முக்கிய சாலை வழியாக சென்ற காட்டு யானை தொரப்பள்ளி பஜாருக்குள் சென்றது. அப்போது ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக கேரட் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை யானை மறித்தது. தொடர்ந்து லாரியில் இருந்த மூட்டைகளை சேதப்படுத்தி கேரட்டுகளை தின்றது. இதில் கேரட்டுகள் நாசமானது. பின்னர் டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்கள், காரை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.