உளுந்தூர்பேட்டை காப்புக்காட்டில் வன விலங்கு சரணாலயம் அமைக்கப்படும்
உளுந்தூர்பேட்டை காப்புக்காட்டில் வன விலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் கூறினார்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை வனவியல் விரிவாக்க மையத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் நாற்று விடப்பட்டு உள்ள மரக்கன்றுகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் வனத்துறையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. பாதிப்புக்குள்ளான இடங்களை தவிர்த்து மீதமுள்ள இடங்களில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்கு அனுமதி கேட்டும், உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்தை நாட உள்ளோம். உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள காப்புக்காடுகளில் வன விலங்கு சரணாலயம் அமைக்க பரிசீலனை செய்யப்படும். வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் வழியாக கிராமங்களுக்கு செல்ல சாலைகள் அமைக்கப்படும். ஆய்வின்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், சாந்தி இளங்கோவன், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் முருகன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.