தக்கலை அருகே ஆய்வுக்கு சென்ற மின் ஊழியரை சிறை பிடித்த பெண்


தக்கலை அருகே ஆய்வுக்கு சென்ற மின் ஊழியரை சிறை பிடித்த பெண்
x

தக்கலை அருேக அடையாள அட்டை இல்லாமல் ஆய்வுக்கு சென்ற மின்வாரிய ஊழியரை பெண் ஒருவர் சிறைபிடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருேக அடையாள அட்டை இல்லாமல் ஆய்வுக்கு சென்ற மின்வாரிய ஊழியரை பெண் ஒருவர் சிறைபிடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டில் தனியாக இருந்த பெண்

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியில் நேற்று முன்தினம் கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, டிப்டாப் உடை அணிந்த ஒரு வாலிபர் அங்கு சென்று 'நான் மின்வாரிய ஊழியர். உங்கள் வீட்டில் உள்ள மின் மீட்டரை சோதனையிட வேண்டும்' என கூறினார். அதற்கு வீட்டில் இருந்த பெண், 'நீங்கள் மின்வாரிய ஊழியர் என்றால் அதற்கான அடையாள அட்டையை காட்டுங்கள்' என கேட்டார். ஆனால் அவரிடம் அடையாள அட்டை இல்லை.

இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் வீட்டின் முன்புற கேட்டை பூட்டு போட்டு பூட்டி அந்த வாலிபரை சிறைபிடித்தார். பின்னர் இதுகுறித்து அந்த பெண் செல்போன் மூலம் கணவருக்கு தகவல் கூறினார்.

வாக்குவாதம்

இந்தநிலையில் அந்த வாலிபரும் யாருக்கோ போன் செய்தார். சற்றுநேரத்தில் சம்பவ இடத்திற்கு 2 பேர் வந்தனர். அவர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நபர் மின்வாரிய ஊழியர்தான் என கூறி அவரை விடுவிக்குமாறு கூறினர். அதற்கு அந்த பெண், 'எனது கணவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து விசாரித்த பிறகு விடலாம்' என கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த வாலிபர் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார். அந்த நபருக்கு உதவி செய்ய வந்த நபர்களும் அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தார். அவர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.

கண்காணிப்பு கேமரா காட்சி

பின்னர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துக்கொண்டு வெள்ளிக்கோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த பெண் அதிகாரியிடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை காண்பித்து விவரத்தை கூறி புகார் செய்தார்.

அப்போது, கேமராவில் பதிவான நபர் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்தான் என்பதை அந்த பெண் அதிகாரி உறுதி செய்தார். உடனே, 'அடையாள அட்டை இல்லாமல் எதற்கு வந்தார்' என பெண்ணின் கணவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பெண் அதிகாரி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

விசாரணையில் முளகுமூடு பகுதியில் உள்ள அந்த வீட்டில் காடை கோழி வளர்ப்பதாகவும், அதற்கான தனி மின்இணைப்பு எடுத்திருக்கிறார்களா? என ஆய்வு செய்ய சென்றதாகவும் அந்த ஊழியர் தரப்பில் கூறப்பட்டது.

வீடிேயா வைரல்

இந்த நிலையில் அடையாள அட்டை இல்லாமல் பெண் மட்டும் தனியாக இருந்த வீட்டிற்கு சென்ற மின்வாரிய ஊழியரை சாமர்த்தியமாக சிறை வைத்த காட்சியும்அந்த ஊழியர் சுவர் ஏறி குதித்து தப்பியோடும் கேமரா பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story