சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி- பசுமாடும் உயிரிழந்தது


சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலி- பசுமாடும் உயிரிழந்தது
x

சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பெண் பலியானார். பசுமாடும் உயிரிழந்தது.

மதுரை

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மனைவி ரஞ்சிதம் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி. இவர் பசுமாடும் வளர்த்து வந்தார். நேற்று வழக்கம்போல பசுமாட்டை மேய்ச்சலுக்காக கிராமத்தின் அருகே உள்ள தோட்டத்து பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையை அவர் பசுமாட்டுடன் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ரஞ்சிதம் மற்றும் பசுமாட்டின் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சிதம் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். அதேபோல் பசுமாடும் உயிரிழந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக வந்தவர்கள் இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சிதம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பசுவின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய காரையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.


Next Story