சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் பெண் பலி
ஜெயங்கொண்டம் அருகே சைக்கிள் மீது மொபட் மோதிய விபத்தில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த மகள் உள்பட 2 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விபத்து
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மனைவி கவிதா (வயது 41). இவர்களுடைய மகள் பவித்ரா (15). இந்தநிலையில் கண்டியங்கொல்லை கிராமத்திலுள்ள எள்ளு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கவிதா தனது மகள் கவிதாவுடன் மொபெட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மருதூர் மேலத்தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் சைக்கிளில் வாரியங்காவல்- செந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர் பந்தல் அருகே சென்று கொண்டிருந்தபோது சொக்கலிங்கம் சைக்கிள் மீது கவிதா ஓட்டி சென்ற மொபட் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
பெண் பலி
இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கவிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, படுகாயம் அடைந்த பவித்ரா மற்றும் சொக்கலிங்கத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பின்னர் கவிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.