காட்டெருமை முட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சாவு
ஏற்காடு காட்டெருமை முட்டியதில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
ஏற்காடு:-
ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேவி (வயது 37). நேற்றுமுன்தினம் கணவன், மனைவி இருவரும் ஏற்காடு பகுதிக்கு ஸ்கூட்டரில் வந்தனர். பின்னர் பட்டிபாடிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை தேவி ஓட்டிச்செல்ல, பின்னால் சேகர் அமர்ந்திருந்தார். ஏற்காடு நடூர் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை திடீரென்று தேவி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். சேகர் காயமின்றி தப்பினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த தேவியை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டெருமை முட்டியதில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வன விலங்குகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.