ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவ வலி.. துரிதமாக செயல்பட்ட பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு


ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவ வலி.. துரிதமாக செயல்பட்ட பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 25 Oct 2022 12:59 PM GMT (Updated: 25 Oct 2022 1:00 PM GMT)

மங்களூரிலிருந்து சென்னை சென்டிரல் செல்லும் ரெயிலில் பெண் பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

சென்னை:

மங்களூரிலிருந்து சென்னை சென்டிரல் வரை செல்லும் ''வெஸ்ட் கோஸ்டு'' விரைவு வண்டியில் அஸ்வின் குமார் தனது மனைவி சாந்தினி என்பவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தினியை பெரம்பூர் ரெயில்வே மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக திருப்பத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து இருவரும் ஏறியுள்ளனர்.

இந்த நிலையில் மதியம் 2.20 மணிக்கு அர்க்கோணம் ரெயில் நிலையத்திலுள்ள 2-வது நடைமேடைக்கு ரெயில் வந்துகொண்டிருந்தபோது சாந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது ரெயில் நிலையத்தில் அலுவலில் இருந்த பெண் தலைமை போலீஸ் பரமேஸ்வரி துரிதமாக செயல்பட்டு சாந்தினியை ரெயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே அரக்கோணம் ரெயில்வே மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதியம் 3.20 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சாந்தினி அழைத்து செல்லப்பட்டார். அங்கு தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை ரெயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்து சென்று பிரசவத்திற்கு உதவியாக இருந்த பெண் தலைமை போலீஸ் பரமேஸ்வரியை பயணிகளும், பொதுமக்களும் வெகுவாக பாரட்டினர்.


Next Story