தவறான சிகிச்சையால் காலை இழந்து தவிக்கும் பெண்


தவறான சிகிச்சையால் காலை இழந்து தவிக்கும் பெண்
x

தவறான சிகிச்சையால் காலை இழந்த பெண், தனக்கு அரசு வேலை கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒற்றைக்கால் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது மகன், மகளுடன் அழுதபடி வந்தார். இதனைக்கண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நத்தம் அசோக்நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 34) என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் கூறுகையில், என்னுடைய கணவர் பிரபு, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தையல் வேலை செய்து எனது மகன், மகளை படிக்க வைத்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நத்தம் பஸ் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். அங்கு எனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் எனது கால்களில் ஒன்றை இழந்து தவிக்கிறேன். என்னால் வேலைக்கும் செல்ல முடியவில்லை. இதனால் எனது மகன், மகளை படிக்க வைக்க முடியவில்லை. வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே எனக்கு தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது குழந்தைகளை காப்பாற்ற அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன் என்றார். இதையடுத்து அந்த பெண்ணை கலெக்டரிடம் சென்று மனு கொடுக்கும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். அவரும், கலெக்டரிடம் சென்று தனக்கு அரசு வேலை கேட்டு கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.


Next Story