திருவட்டாரில் பட்டப்பகலில் துணிகரம்: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் சங்கிலி பறிப்பு
திருவட்டாரில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டாரில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 பவுன் சங்கிலி பறிப்பு
திருவட்டார் அருகே சாரூர் கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), லாரி டிரைவர். இவருடைய மனைவி சுனிதா (36). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் ஏற்றக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், மகன் 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
சுனிதா தினமும் இருவரையும் பள்ளியில் விட்டு அழைத்து வருவது வழக்கம். அதே போல் நேற்று மாலையில் சுனிதா இருவரையும் அழைத்து வர ஸ்கூட்டரில் மூவாற்றுமுகம் பகுதியில் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அதில் ஒருவர் சுனிதா கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்தார். அப்போது அவரிடம் போராடிய சுனிதாவை தாக்கினார். இதனால் சுனிதா ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே 3 பேரும் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் சுனிதா படுகாயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து சுனிதாவிடம் விசாரணை நடத்தினர்.
3 பேரை தேடுகிறது
மேலும் தங்கசங்கிலி பறிப்பு நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் மூன்று பேரும் முககவசம் அணிந்து, பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் பெண்ணிடம் தங்கசங்கிலியை 3 பேர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.