கிலோ ரூ.50-க்கு தக்காளி விற்ற பெண்


கிலோ ரூ.50-க்கு தக்காளி விற்ற பெண்
x

ஸ்ரீவில்லிபுத்தூாில் கிலோ ரூ.50-க்கு தக்காளி பெண் விற்றார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகி வந்தது. இதனால் தக்காளிைய வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வந்தது.

இந்தநிலையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திலகவதி, தோட்டக்கலைத்துறையை சேர்ந்த சித்திரை செல்வி ஆகியோரின் ஆலோசனையின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர்சந்தையில் விவசாயிகள் நேரடியாக வந்து தக்காளியை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த விவசாயி மாரியம்மாள் என்பவர் 130 கிலோ தக்காளியை விற்பனைக்காக கொண்டு வந்தார். இவர் ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்பனை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் போட்டி ேபாட்டு கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர். சுமார் 1 மணி நேரத்தில் தக்காளி விற்று தீர்ந்தது. இதுகுறித்து விவசாயி மாரியம்மாள் கூறுகையில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனையின் படி தக்காளியை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்தேன். 1 மணி நேரத்தில் 130 கிலோ தக்காளி விற்று தீர்ந்தன. நாளை (அதாவது இன்று) 100 கிலோ தக்காளியை விற்பனைக்காக கொண்டு வர உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story