கணவர் மீதான கோபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்


கணவர் மீதான கோபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்
x
தினத்தந்தி 27 April 2023 12:45 AM IST (Updated: 27 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே கணவர் மீதான கோபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே கணவர் மீதான கோபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கிணற்றில் குதித்த பெண்

திருவட்டாரை அடுத்த அரமன்னம் இட்டகவேலியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 35), பிளம்பராக உள்ளார். இவருடைய மனைவி தீபா (31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

புஷ்பராஜ் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவாராம். நேற்று முன்தினம் வேலையை முடித்து வீட்டுக்கு வந்த அவருக்கும், மனைவி தீபாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தீபா, தினமும் தகராறில் ஈடுபடும் உன்னிடம் வாழ்வதை விட சாவதே மேல் என கூறியபடி அருகில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் குதித்து விட்டார். அந்த கிணற்றில் 10 அடிக்கும் குறைவாக தண்ணீர் இருந்தது. இதில் கீழே இறங்கி செல்ல படிகள் கிடையாது.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதனை சற்றும் எதிர்பார்க்காத கணவர் புஷ்பராஜ் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்தனர். பிறகு ஒரு வாளியை பெரிய கயிற்றில் இறக்கி அதில் ஏறிக்கொள்ளுமாறு தீபாவிடம் கூறினர். ஆனால் தீபா வாளியில் ஏற மறுத்து விட்டார். பின்னர் மோட்டார் கொண்டு வரப்பட்டு குழாய் மூலமாக கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்தது.

இதற்கிடையே மார்த்தாண்டம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீபாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கயிற்றில் வலையை கட்டி (கூடையை போன்ற வடிவில்) கிணற்றில் இறக்கிய வீரர்கள், அதில் தீபாவை ஏற வைத்து மீட்டனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஏற்கனவே 2 முறை தீபா கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும், அவரை கடும் சிரமத்திற்கு இடையே மீட்ட சம்பவம் நடந்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


Next Story