2 வயது குழந்தையை குப்பையில் அமுக்கி கொல்ல முயன்ற பெண்ணால் பரபரப்பு


2 வயது குழந்தையை குப்பையில் அமுக்கி கொல்ல முயன்ற பெண்ணால் பரபரப்பு
x

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தையை குப்பை தொட்டிக்குள் அமுக்கி கொல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர். குழந்தையை மீட்டு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தையை குப்பை தொட்டிக்குள் அமுக்கி கொல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்தனர். குழந்தையை மீட்டு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்களுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் பெண் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார்.

அங்கு குழந்தை அழும் சத்தமும் கேட்டதால் அந்த பகுதியில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்து உள்ளனர்.

அப்போது பச்சிளம் குழந்தையை அந்த பெண் குப்பை தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் குழந்தையை கொல்லவிடாமல் தடுத்து மீட்க முயன்றனர்.

உடனடியாக அவர்கள் சைல்டு லைனிற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அந்த பெண் கொல்ல முயன்ற 2 வயது ஆண் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது தெலுங்கு மொழியில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போன்று பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்தனர். மேலும் அந்த பெண்ணை போலீசார் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு சென்றனர்.

குழந்தை யாருடையது?

மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் யார், அது யாருடைய குழந்தை, கடத்தி வந்து கொல்ல முயன்றாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தினால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story