வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி


வள்ளிமலை அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி
x

சித்தூரில் தம்பதியை கொன்ற காட்டு யானை, வள்ளிமலை பகுதியிலும் பெண்ணை தாக்கி கொன்றது. அதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை பிடிக்கப்பட்டது.

வேலூர்

தம்பதியை கொன்றது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலா அடுத்த ராமபுரம் தலித்வாடா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 59), விவசாயி. இவரது மனைவி செல்வி (54). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது காட்டில் இருந்து வந்த ஒற்றை யானை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசம் செய்தது.

இதை பார்த்த கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். அவர்களை காட்டுயானை துரத்தியது. இதில் நிலை தடுமாறி விழுந்த தம்பதியை யானை மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தை அடுத்து ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானையை துரத்தினர். அந்த யானை காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது.

பெண் சாவு

இந்த நிலையில் அந்த யானை நேற்று அதிகாலை வேலூர் மாவட்டம் வள்ளிமலை அருகே ஒரு பெண்ணை துதிக்கையால் தூக்கி வீசி கொன்றது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

வேலூர் மாவட்டம், வள்ளிமலையை அடுத்த பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாயி. இவரது மனைவி வசந்தா (57). தம்பதி இருவரும் அங்குள்ள வனப் பகுதியை ஒட்டி மலையடிவாரத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தம்பதி இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஆடுகள் கத்தி உள்ளது. உடனே வசந்தா வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது ஆடு இறந்து கிடந்த நிலையில் ஆட்டின் பக்கத்தில் காட்டு யானை ஒன்று நின்றிருந்தது. யானையை விரட்ட வசந்தா சத்தம் போட்டு உள்ளார்.

அவரை யானை சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசி உள்ளது. இதில் தலையில் படுகாயம் அடைந்த வசந்தா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் ஓடிவந்தார். அப்போது தனது மனைவியை யானை தூக்கி வீசி கொன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர். இதனால் அந்த யானை வனப் பகுதிக்குள் சென்று பதுங்கியது.

கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று ஒற்றை யானையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் அந்த ஒற்றை யானை தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராமாபுரம் ஏரி பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் பதுங்கியது. இதனை அடுத்து ஆந்திர மாநில வன அதிகாரிகள் மற்றும் தமிழக வன அதிகாரிகள், வன ஊழியர்கள் கூட்டாக இணைந்து காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஜெயந்த், விநாயகா என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. மேலும் ஒற்றை காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பிடிக்கப்பட்ட காட்டு ஒற்றை யானையை திருப்பதி பகுதி காப்பு காட்டில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் காட்டு யானை மிதித்து கொன்ற வசந்தா குடும்பத்தினருக்கு வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமையில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. தமிழக அரசும் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.


Next Story