குடும்ப தகராறில் பெண் கழுத்தை அறுத்து கொலை
குடும்ப தகராறில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
தகராறு
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஜியாபத்(வயது 50). இவர் இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரியாஷ்பி(44). இவர்களுக்கு ஷேக்சவூத் (25) என்ற மகனும், சேக்பீட்சா (22) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு சென்று வசிக்கலாம் என்று ரியாஷ்பியிடம், ஜியாபத் கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்துள்ளார். இதற்கு ரியாஷ்பி மறுத்ததோடு, ஜெயங்கொண்டத்தில் உள்ள வீட்டில் போதிய வசதியை செய்து கொடுத்தால், அங்கு குடியிருக்க செல்லலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கழுத்தை அறுத்து கொலை
மேலும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ஜியாபத், ரியாஷ்பியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜியாபத், ரியாஷ்பியை தவிர வீட்டில் இருந்த மற்றவர்களை வெளியேற்றிவிட்டு கதவை பூட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் ரியாஷ்பியை தான் மறைத்து வைத்திருந்த இறைச்சி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்ததோடு, நெஞ்சில் குத்தியுள்ளாா். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா்.
உறவினர்கள் கதறல்
இதற்கிடையே வீட்டிற்கு வெளியே இருந்தவர்கள் கதவை திறக்குமாறு கூறி சத்தம்போட்டபடி கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும் கதவை தட்டியுள்ளனர். இதையடுத்து ஜியாபத் கதவை திறந்துள்ளார்.
உடனடியாக அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரியாஷ்பி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரியாஷ்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜியாபத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை ெசய்துவிட்டு மனைவியின் உடல் அருகே அமர்ந்து அழுத கணவர்
ஜியாபத்துக்கும், ரியாஷ்பிக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஜியாபத் கத்தியால் கழுத்தை அறுத்தும், குத்தியும் ரியாஷ்பியை கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடல் அருகில் அமர்ந்தும், படுத்தும் ஜியாபத் அழுது கொண்டிருந்தார். அப்போது உறவினர்கள் தொடர்ந்து கதவை தட்டியதையடுத்து அவர் கதவை திறந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.