ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறிப்பு
நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி கபாலிபாறையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 58). இவர் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணவேணி நேற்று வேலைக்கு செல்வதற்காக நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்ற 2 பெண்கள், அவரிடம் குழந்தையை கொடுத்து வைத்திருக்கும்படி கூறினர். முருகன்குறிச்சி வந்ததும், அந்த பெண்கள் கீழே இறங்க வேண்டும் என்று கூறி குழந்தையை பெறுவது போல் கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி சென்று விட்டனர்.
இந்த நிலையில் நூதன முறையில் சங்கிலி திருட்டு போனதை அறிந்த கிருஷ்ணவேணி சத்தம் போட்டார். உடனே பஸ்சை நிறுத்தி அந்த பெண்களை தேடினர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் முருகன்குறிச்சி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.