பிளேடால் கையை கீறிக்கொண்ட பெண்
வீட்டின் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் அருகே பிளேடால் கையை கீறிக்கொண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 38), டிரைவர். இவருடைய மனைவி தெய்வானை (33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சடையப்பன் நேற்று காலை தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தங்கை சடையம்மாள் (33) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
நுழைவு வாயில் அருகே வந்ததும் தீக்குளிக்கும் நோக்கத்தில் சடையப்பன் தான் பையில் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று மண்எண்ணெய் கேனை அவரிடம் இருந்து பறித்தனர். இதனிடையே சடையம்மாள் தான் மறைத்து எடுத்து வந்திருந்த பிளேடால் கையை கீறிக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சடையம்மாளிடம் இருந்து பிளேடை பறித்ததுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
இதுகுறித்து சடையப்பன், தெய்வானை ஆகியோர் கூறியதாவது:-
எனது வீட்டின் அருகே ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. எங்களுடைய வாசல் படியையொட்டி கட்டப்படுவதால் எங்களால் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது.
இந்த குடிநீர் தொட்டியை இங்கு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு ஒரு இடத்துக்கு மாற்றக்கோரியும் பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது. இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் தற்கொலை செய்யும் நோக்கத்தில் மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் கார் முன்பு தர்ணா
அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா (55). இவர் தனது தங்கை மகாலட்சுமியுடன் (54) கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ஜெயா கூறும் போது, 'உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என்னை மருமகள் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.