வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கிய பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கடனை திரும்ப செலுத்தாததால் வீட்டுக்கு ‘சீல்’ வைப்போம் என நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதை தொடர்ந்து விரக்தி அடைந்த பெண் செல்ேபானில் பேசி வீடியோ பதிவிட்டபின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடனை திரும்ப செலுத்தாததால் வீட்டுக்கு 'சீல்' வைப்போம் என நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதை தொடர்ந்து விரக்தி அடைந்த பெண் செல்ேபானில் பேசி வீடியோ பதிவிட்டபின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிதி நிறுவனத்தில் கடன்
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் உள்ள புதிய அக்ராவரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கீதா (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கீதா அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் ராணிப்பேட்டை முத்துக்கடையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து, ரூ.9 லட்சம் கடன் பெற்றிருந்தார். அந்த தொகையை தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக கீதா கடனுக்கான தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கீதாவை செல்போனில் தொடர்பு கொண்ட நிதி நிறுவன ஊழியர்கள் தவணை தொகையை திரும்ப செலுத்தாவிடில் வீட்டிற்கு 'சீல்' வைத்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீதா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உறவினர்கள் முற்றுகை
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முத்துக்கடையில் அவரை மிரட்டிய தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் கீதாவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிதிநிறுவனம் முன்பாக சென்னை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
வீடியோ ஒப்படைப்பு
அப்போது அவர்கள் கீதா தற்கொலைக்கு முன்பு செல்போனில் கண்ணீர் மல்க வீடியோவில் பேசி பதிவிட்டுள்ளதை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த வீடியோவில், ''கடனை முறையாக செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தனது வீட்டிற்கு 'சீல்' வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். வேறு வழி இல்லாமல் நான் இந்த முடிவை எடுக்கிறேன். நான் வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கு சேர வேண்டிய பி.எப். (வைப்புநிதி) மற்றும் செட்டில்மெண்ட் (பணிக்கொடை) ஆகிய தொகைகளை வைத்து அந்த கடனை செலுத்திவிடுங்கள். கடனில் நடுத்தெருவில் உங்களை விட்டு செல்வதால் என்னை திட்ட வேண்டாம்''் என தனது மகள்களுக்கு கடைசி நேரத்தில் கண்ணீர் மல்க உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இரு ஊழியர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.