உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு
உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி சாவு
கபிஸ்தலம் அருகே உருட்டு கட்டையால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
உருட்டு கட்டையால் தாக்குதல்
கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கீழத்தெருவில் வசிப்பவர் அரசு (வயது37). இவரது மனைவி சீதளாதேவி(36). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசு தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது மதுகுடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 16-ந் தேதி இரவு அரசு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் அருகில் இருந்த உருட்டு கட்டையால் சீதளாதேவியை தாக்கினார்.
கொலை வழக்காக மாற்றம்
இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மனைவியை உருட்டு கட்டையால் தாக்கிய அரசை கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சீதளாதேவி இறந்தார். இந்த வழக்கை கபிஸ்தலம் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.