நெகமம் அருகே துளை போடும் எந்திரம் தலையில் விழுந்து தொழிலாளி பலி
நெகமம் அருகே துளை போடும் எந்திரம் தலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெகமம்
நெகமம் அருகே துளை போடும் எந்திரம் தலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
விவசாய தொழிலாளி
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் நடுக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 49). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மோகனப்பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மோகனப்பிரியா மற்றும் அவரின் மகள், மகன் ஆகியோர் அந்தப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்து திருமலைசாமி தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது ேதாட்டத்தில் உள்ள தென்னை மரத்தை சுற்றி புதர்கள் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு துளை போடும் (பவர் டிரில்லர்) எந்திரம் மூலம் வட்டப்பாத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
எந்திரம் தலையில் விழுந்தது
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவரின் தலை மற்றும் முகத்தில் அந்த எந்திரம் விழுந்தது. இதன்காரணமாக அவருக்கு படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டார். கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரின் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, திருமலைசாமி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதனர்.
மேலும் இதுபற்றி அறிந்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திருமலைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.