ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி
ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா எனபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இரவு சென்றுள்ளார். அப்போது வெள்ளை கால்வாய் அருகே கை, கால், தலை ஆகிய பகுதிகளில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பாணாவரம் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் புதுப்பட்டு கிராமம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மஞ்சு (வது 45) என்பது தெரிய வந்தது. இவர் கூலி வேலை செய்து வந்த இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மஞ்சு எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்திருக்கலாமா என்பது குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.