வடமதுரை அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை; வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது


வடமதுரை அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை; வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
x

வடமதுரை அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளியை படுகொலை செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளியை படுகொலை செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் கொலை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் முட்புதருக்குள் இன்று காலை தலையில் பலத்த காயத்துடன் 30 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதேபோல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், வேடசந்தூர் துணை சூப்பிரண்டு துர்காதேவி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

அப்போது வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ரத்தக்கறை படிந்த பெரிய கல் ஒன்று கிடந்தது. இதன்மூலம் அந்த வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மோப்ப நாய் சோதனை

பின்னர் இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் வடமதுரை அருகே உள்ள முத்தனாங்கோட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராம்குமார் (வயது 31) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே ராம்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது ராம்குமார் உடல் கிடந்த இடத்தில் இருந்து வெள்ளபொம்மன்பட்டி சாலையில் சிறிது தூரம் ஓடிச் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதன்மூலம் ராம்குமாரை கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் வெள்ளபொம்மன்பட்டி சாலை வழியாக தப்பி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து ராம்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமாரை கொலை செய்த மர்மநபர்கள் யார்-யார்? அவரை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக வேலை செய்யும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அனுபம் பவுரி (21), மகாவீர் திவர் (22) ஆகியோருக்கும், ராம்குமாருக்கும் இடையே கடந்த 24-ந்தேதி இரவு பஸ்சில் சென்றபோது தகராறு ஏற்பட்டது. பின்னர் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே பஸ்சை விட்டு இறங்கி அவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

வடமாநில வாலிபர்கள் கைது

அப்போது ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர்கள், ராம்குமார் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பின்னர் அங்குள்ள முட்புதரில் ராம்குமாரின் உடலை வீசிவிட்டு, அவர்கள் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு அறையில் பதுங்கியிருந்த அனுபம் பவுரி, மகாவீர் திவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கு திருமணமாகி அம்சவர்தினி (6) என்ற மகளும், கவிக்சன் (4) என்ற மகனும் உள்ளனர். அவரது மனைவி முத்துலட்சுமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story