மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தீக்குளிக்க முயற்சி
ஆரணி தாலுகா தெள்ளூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் அருள் (வயது 38). தொழிலாளியான இவர் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் வீடு கட்டியுள்ளார்.
இவருக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் அரசின் நிதி ரூ.70 ஆயிரம் வழங்க வேண்டியுள்ளது. இந்த பணத்தை பெறுவதற்கான துறை அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அதற்கு அவரிடம் சிலர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கலெக்டரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாததால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அருள், மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து கலெக்டர் அலுவலக வளாக வரவேற்பு வளாக பகுதி முன்பு உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது