செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா; அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு


செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா; அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
x

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி செலவில் நிறுவப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பலர் நேற்று விவாதித்தனர்.

அவர்களுக்கு பதிலளித்து வனத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் பேசியதாவது:-

நாடு வளமாக இருக்க வேண்டுமென்றால், அங்கு வளமான காடுகள் இருக்க வேண்டும். அந்த காடுகளையும் அதை சார்ந்து இருக்கும் பல்லுயிர்களையும் காப்பதே அந்த நாட்டு மக்களின் தலையாய கடமை ஆகும்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டம் 24.9.2022 அன்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மரங்கள் நடுவதற்கு பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளிடம் இருந்து 15.16 லட்சம் மரக்கன்றுகள் தேவை என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

ஆவணப்படம்

இந்த இயக்கத்தின் மூலம் முதல்-அமைச்சர் நம் அனைவரிடமும் எதிர்பார்ப்பது, அனைத்து காலியிடங்களிலும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதும், ஒவ்வொருவரும் எத்தனை மரங்கள் வளர்க்க இயலுமோ அத்தனை மரங்களை வளர்க்க முன்வரவேண்டும் என்பதும்தான்.

யானைகள் காட்டின் ஆதாரம்; அவை அழிந்தால் இயற்கைக்கே சேதாரம். உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருதை வென்ற தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்டது.

அப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியர் உட்பட 91 யானை பாகன்கள் மற்றும் உதவி யானை பாகன்களை கவுரவிக்கும் வகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.91 லட்சம் வழங்கப்பட்டது. இந்த ஆவணப் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ்-க்கு ஒரு கோடி ரூபாயை முதல்-அமைச்சர் வழங்கினார்.

நீல்போ என்ற வேதிப்பொருளை பயன்படுத்தி விவசாய நிலங்களில் வன விலங்குகள் நுழைவதை தடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தாவரவியல் பூங்கா

கிராம அளவில் ஒரு எக்டேர் பரப்பளவில், வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் சிறுவனமே, மரகத பூஞ்சோலை எனப்படும். இந்த திட்டத்தின் கீழ் 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்படும். அந்நிய தாவரங்களை அகற்றும் பணி வனத்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகப்புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவான இங்கிலாந்தில் உள்ள கெவ் கார்டனின் ஒத்துழைப்போடு உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா ரூ.300 கோடி மதிப்பீட்டில் 350 ஏக்கர் பரப்பளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடம்பூரில் நிறுவப்பட உள்ளது. சூழல் பாதுகாப்பு பசுமைப் பணிக்காக 68.40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கடற்பசு பாதுகாப்பு மையம்

பின்னர் வனத் துறை தொடர்பாக அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* தஞ்சை மாவட்டம் மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* ராம்சார் தளம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* ராம்சார் தளம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

* அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.


Next Story