கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் அருகில் 14 நாட்களில் மீட்டெடுக்கும் கட்டமைப்புகள் அமைத்து உலக சாதனை
கைவிடப்பட்ட ஆழ்துைள கிணறுகளின் அருகில் 14 நாட்களில் மீட்டெடுக்கும் கட்டமைப்புகள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி 4 உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கின.
கைவிடப்பட்ட ஆழ்துைள கிணறுகளின் அருகில் 14 நாட்களில் மீட்டெடுக்கும் கட்டமைப்புகள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி 4 உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கின.
நீர் ஆதாரம்
திருவண்ணாமலை மாவட்டம் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மத்திய அரசின் நீர்வளத் துறையினால் அறிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில் நடவடிக்கையை மேற்கொள்ள முதல்-அமைச்சர் அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 30 நாட்களுக்குள் 1,121 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 18 ஒன்றியங்களில் உள்ள 600 கிராம ஊராட்சிகளில் உள்ள 1333 கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை சுற்றி மீள் நிரப்பு (மீட்றெடுக்கும்) கட்டமைப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,.
14 நாட்களில் சாதனை
இதற்கான பணிகளை கடந்த 20-ந் தேதி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். இந்தப் பணிகள் கடந்த 2-ம் தேதிக்கு முன்பு நிறைவு பெற்றது.
இதன் மூலம் தற்பொழுது உபயோகத்தில் இல்லாத 1333 ஆழ்துளை குழாய் கிணறுகளை சுற்றிலும் 3 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் மற்றும் 2.5 ஆழம் உள்ளவாறு குழிகளை ஏற்படுத்தி ஆழ்துளை கிணறுகளின் குழாய்களில் நீர் கசிவுத் துளைகளை அமைத்து மண்புகா வண்ணம் வலை சுற்றி அந்த குழி முழுவதிலும் ஜல்லி கற்களை நிரப்பி அதன் மேற்பரப்பில் அரை அடி உயரத்திற்கு குழியை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டு உள்ளது.
மேலும் ஜல்லி நிரப்புவதற்கு முன்பு மழை நீர் உட்பகுவதற்கு வசதியாக குழியின் 4 பக்கத்திலும் பக்கத்திற்கு மூன்று குழாய்கள் விதம் 12 குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஒரு மீள் நிரப்பு கட்டமைப்பு ரூ.50,000 என்ற அடிப்படையில் மொத்தம் 1333 மீள் நிரப்பு கட்டமைப்புகள் ரூ.6 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டு முழுவதும் சராசரியாக 1046 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பெறும் நிலையில் மழை நீர் இந்த நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளின் மூலம் நிலத்திற்குள் செலுத்தப்பட்டு ஒரு 4 முதல் 5 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது.
அங்கீகார சான்றிதழ்
இந்திய துணை கண்டத்தில் வேறு எந்த மாவட்டமும் செய்திடாத இந்த புதிய முயற்சியை திருவஷ்ணாமலை மாவட்டம் நிகழ்த்தியது.
இதனையொட்டி எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி உலக சாதனை நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனம் ஆகிய உலக சாதனை நிறுவனங்கள் மூலம் பல ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதற்கான சான்றிதழ்களை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங் ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வழங்கி கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அமித் ஹிங்க்ரோனி, சத்யஸ்ரீகுப்தா, பாவனா ராஜேஷ், சவுஜன்யா, அர்ச்சனா ராஜேஷ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தினைச் சேர்ந்த செந்தில்குமார், சாந்தாராம், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தை சேர்ந்த ஜெகநாதன், யாஷ்வந்த் சாய், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், நாகஜோதி, திருமூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் அருண், உதவி இயக்குனர் (வளர்ச்சிகள்) சரண்யா தேவி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.