காயத்துடன் திரிந்த யானை மாயம்
காயத்துடன் திரிந்த யானை மாயம்
இடிகரை
கோவை அருகே வனப்பகுதியில் காயத்துடன் திரிந்த காட்டுயானை மாயமானது.அதனை 2-வது நாளாக தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
வாயில் காயத்துடன் யானை
கோவை அருகே ஆனைகட்டி- அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள கொடுங்கையாற்றின் நடுவே 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று வாயில் காயத்துடன் நின்றிருந்தது. ஆனால் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதையடுத்து கேரள, தமிழக வனத்துறையினர் இணைந்து, யானையை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் இறங்கினர். ஆனால் திடீரென காட்டு யானை மாயமாகி விட்டது. தொடர்ந்து தமிழக, கேரள வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழக வனத்துறையினர் மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ், செந்தில் பெரியநாயக்கன் பாளையம் வனசரகர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவை வன மருத்துவர் சுகுமார் மற்றும் வன மருத்துவர்கள் சதாசிவம், விஜயராகவன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளிக்க இருந்தனர். மேலும், டிரோன் மூலமும் யானையை தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
2-வது நாளாக தேடும் பணி
நேற்று 2-வது நாளாக யானையை தேடும் பணியில் தமிழக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 7 குழுக்களாக பிரிந்து சீங்குழி, பட்டிசாலை, காலனிபுதூர், கோபனாரி, கொடுங்கையாறு ஆற்று பள்ளம், தமிழக- கேரள எல்லைகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். டிரோனை பறக்க விட்டும் யானையை தேடி வந்தனர்.மேலும் யானையை தேடுவதற்காக டாப்சிலிப்பில் இருந்து கலீம் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானை கோபனாரி வனப்பகுதியில் நிறுத்தப்பட்டு, தேடும் பணி நடக்கிறது.கேரள வனத்துறையினர் 4 பிரிவுகளாகப் பிரிந்து வன அலுவலர் ஜோஸ் தலைமையில் அட்டப்பாடி வனப்பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
யானை தென்பட்டது
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் செங்குட்டை என்ற பகுதியில் யானை தென்பட்டது.உடனடியாக யானையை சுற்றி வளைக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர்.ஆனால் அதற்குள் மீண்டும் அந்த யானை மாயமாக மறைந்து விட்டது.இந்த நிலையில் மேலும் அரிசி ராஜா என்கிற முத்து கும்கி யானையை டாப்சிலிப் பகுதியில் இருந்து வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது யானை எங்கு இருப்பது என்று தெரிந்து விட்டதால் இரவில் அந்த யானையை கண்காணித்து அதனை பிடிப்பதற்கான அனைத்து வேலைகளும் தீவிரபடுத்தப்படும். பின்னர்கும்கி யானைகள் உதவியுடன் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.