இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Sept 2023 3:15 AM IST (Updated: 20 Sept 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

வடவள்ளி அருகே காதல் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

வடவள்ளி

வடவள்ளி அருகே காதல் கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் திருமணம்

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் நிர்மல்ராஜ். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி 2 பேரும் அந்த பகுதியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நிர்மல்ராஜ் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனை பார்த்த நிர்மல்ராஜ், வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளமாட்டாயா என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிர்மல்ராஜ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

இளம்பெண் தற்கொலை

சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு, மனைவியின் எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இது தான் நான் உங்களுக்கு கடைசியாக அனுப்பும் மெசேஜ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் நிர்மல்ராஜ் பதறி அடித்துக்கொண்டு, வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் நந்தினி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்,அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடவள்ளி போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

நந்தினிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story