கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை


கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
சேலம்

மேச்சேரி:-

ஜலகண்டாபுரம் அருகே காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்

ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடை மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் நந்தினி (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்துவிட்டார். நந்தினி நங்கவள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு வரை படித்தார். அவரது தந்தை இறந்து விட்டதால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவர் அரியாம்பட்டி பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி வசந்த் (26) என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலைில் கடந்த ஒரு வருடமாக வசந்த், நந்தினியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வசந்த்திடம், நந்தினி கூறியுள்ளார். ஆனால் அதற்கு வசந்த் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் நந்தினி காணப்பட்டுள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் இரவு முழுவதும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று காலை அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் மேலே நந்தினி அணிந்து இருந்த துப்பட்டாவும், அவர் கையில் வைத்திருந்த டார்ச்சு லைட்டும் கிடந்தது.

இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் நந்தினியின் உடலை தேடினர். பின்னர் அவரது உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து ஜலகண்டாபுரம் போலீசார் விரைந்து வந்து, நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதலன் மீது வழக்கு

இது குறித்து நந்தினியின் தாய் லட்சுமி ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், எனது மகள் நந்தினியும், வசந்த்தும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து நந்தினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். எனவே வசந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதன் பேரில் போலீசார் வசந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story