தேயிலை தோட்டத்தில் பணியாற்றியபோது இளம்பெண்ணை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு


தேயிலை தோட்டத்தில் பணியாற்றியபோது இளம்பெண்ணை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டத்தில் பணியாற்றியபோது இளம்பெண்ணை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

தேயிலை தோட்டத்தில் பணியாற்றியபோது இளம்பெண்ணை சிறுத்தை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பெண்ணை தாக்கிய சிறுத்தை

வால்பாறை பகுதியில் பட்டப்பகலில் சிறுத்தைப்புலி தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் வடமாநில சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கியது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிஅளவில் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு பகுதியைச் சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி சீதாமுனிக்குமாரி (வயது 23) சிறுகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு பகுதியைச் சேர்ந்த 35-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேயிலை தோட்ட பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று சீதா முனிக்குமாரி மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதில் சீதா முனிக்குமாரிக்கு கை, இரண்டு காலிலும் நகக்கீறல் பட்டு ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்து அருகில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டதும் சிறுத்தை சீதாமுனிக்குமாரியை விட்டு விட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதையடுத்து சக தொழிலாளர்கள் சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்த சீதா முனிக்குமாரியை மீட்டு சிறுகுன்றா எஸ்டேட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் வனத்துறையின் சம்பவயிடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவனமாக இருக்க வனத்துறை அறிவுரை

வால்பாறை பகுதியில் லேசான மழை கடுமையான வெயில் காரணமாக தேயிலை தோட்ட பகுதிகளை ஒட்டிய இடங்களில் நுனிப்புற்கள் வளர்ந்து வருவதால் அவைகளை சாப்பிட மான்கள், கிளையாடுகள் அதிகளவில் வருகிறது. இவைகளை வேட்டையாட சிறுத்தைகள் தேயிலை தோட்ட பகுதிகளுக்கு வருகின்றது. எனவே எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளார்கள்.

தேயிலை ேதாட்டத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணை சிறுத்தை தாக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story