காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளிப்பு
காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்தார்.
விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 20). எட்டக்காபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (24). இவர்கள் இருவரும் சூலக்கரையில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் காதலித்து வந்தநிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். 2019-ம் ஆண்டு விஜயலட்சுமியின் பெற்றோரின் புகாரின் பேரில் பாலசுப்பிரமணியனின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து விஜயலட்சுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இதையடுத்து 2022-ம் ஆண்டு பாலசுப்பிரமணியன் போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து விஜயலட்சுமியும், பாலசுப்பிரமணியனும் பதிவு திருமணம் செய்து கொண்டு குல்லூர்சந்தையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
எட்டக்காப்பட்டியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாளுக்கும், விஜயலட்சுமிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று வீட்டில் இருந்த விஜயலட்சுமி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விஜயலட்சுமியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்த விஜயலட்சுமிக்கு 95 சதவீதம் தீக்காயம் உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.