காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார். இவருடைய மனைவி முருகசுந்தரி (வயது 27). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
சுரேஷ் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தங்கி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் வாரம் ஒருமுறை தான் வீட்டுக்கு வருவாராம். மேலும் அவர் வீட்டு செலவுக்கு சரியாக பணம் கொடுப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் முருகசுந்தரி சுயஉதவி குழுவில் அதிக கடன் வாங்கி இருந்தாராம்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேசின் உறவினரான மகாராஜன் என்பவர் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரேஷ் நேற்று காலை நடுவக்குறிச்சிக்கு வந்தார். அப்போது வீட்டு செலவுக்கு முருகசுந்தரி பணம் கேட்டதாகவும், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகசுந்தரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.