3 ஆண்டு காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை போராடி கரம் பிடித்த இளம்பெண்
3 ஆண்டு காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் மகள் பாக்யலட்சுமி (வயது 23). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் வினோத் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாக்யலட்சுமியிடம் வினோத் உல்லாசமாக இருந்துள்ளார்.
5 மாதம் கர்ப்பம்
இதன் விளைவாக பாக்யலட்சுமி 5 மாத கா்ப்பமானார். இது பற்றி வினோத்திடம் பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு அவர், திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு கருவை கலைத்துவிடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் கருவை கலைக்க மறுத்த பாக்யலட்சுமி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாக்யலட்சுமி தனது பெற்றோர் மூலம் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருமணம்
இதையடுத்து வினோத்தையும், அவரது பெற்றோரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பல மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக வினோத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இரு வீட்டார் உறவினர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஸ்ரீ வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.