மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது மின்கம்பியில் சிக்கி இளம்பெண் பலி


மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது மின்கம்பியில் சிக்கி இளம்பெண் பலி
x

மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், உயர்மின் அழுத்த கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி பலியானார்.

சென்னை

காதல் திருமணம்

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், அம்பாள் நகர், பாரதியார் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 24). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (20), இவர்கள் இருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் சண்முகப்பிரியா கர்ப்பமானார். இதையறிந்த இருவீட்டாரும் சேர்ந்து பேசி 2 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ெசய்து வைத்தனர்.

மின்சாரம் தாக்கி பலி

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சண்முகப்பிரியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சண்முகப்பிரியா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கணவர் மற்றும் குழந்தை இருவரும் தூங்கியதும் சண்முகப்பிரியா வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டின் அருகில் செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியில் விழுந்த அவர், கையால் மின்கம்பியை பிடித்தபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகப்பிரியா கையில் மின்கம்பியை பிடித்தபடியே மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையில் நள்ளிரவில் விழித்து பார்த்த முனுசாமி, அருகில் படுத்து இருந்த தனது மனைவி சண்முகப்பிரியாவை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடியபோதுதான் அவர், மின்சாரம் தாக்கி வீட்டின் வெளியே இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

சம்பவ இடத்துக்கு வந்த ராமாபுரம் போலீசார், சண்முகப்பிரியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசாரும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சண்முகப்பிரியாவுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சண்முகப்பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story